சட்டப்பூர்வமாக சொந்தமான காணிகளை கையளிக்க வேண்டும்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு சட்டப்பூர்வமாக சொந்தமான காணிகளை கட்டாயமாகக் கையளிக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

by Staff Writer 04-10-2018 | 7:37 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மக்களுக்கு சட்டப்பூர்வமாக சொந்தமான காணிகளை கட்டாயமாக அந்த மக்களிடம் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய காணி விடுவிப்பு நடவடிக்கையினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அக்கரைப்பற்றில் நீர வளம் உகந்த அளவில் இருந்தாலும் முறையான விநியோகக் கட்டமைப்பு இன்மையால் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மடு புனித பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் இழந்த அபிவிருத்தியின் நற்பலனை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க அனைவரும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

ஏனைய செய்திகள்