தெபுவன பொலிஸ் சார்ஜனுக்கு விளக்கமறியல்

துப்பாக்கியுடன் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக தெபுவன பொலிஸ் சார்ஜனுக்கு விளக்கமறியல்

by Staff Writer 04-10-2018 | 8:25 PM
Colombo (News 1st)  துப்பாக்கியுடன் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியதை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி டிப்பர் ஒன்றை குறித்த பொலிஸ் சார்ஜன் கைப்பற்றியுள்ளார். எனினும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த டிப்பரை மறுநாள் விடுவித்ததாகக்கூறி தனது துப்பாக்கியுடன் வீதியில் இறங்கி எதிர்ப்பை வௌியிட்டுள்ளார். இரண்டு மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இவரைக் கைது செய்தனர். இதன்போது, அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி செயற்பட்ட போதிலும் அதனால் யாருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பொலிஸ் சார்ஜன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சேவையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தவறானது என இன்று நீதிமன்றத்தில் பொலிஸ் சார்ஜன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். இந்த விடயத்தில் நீதியை எதிர்பார்த்து, பொலிஸ் சார்ஜனின் குடும்பத்தினர் களுத்தரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இன்று சென்றிருந்தனர்.