ஜெயலலிதாவின் மரணம்: வாக்குமூலங்களில் முரண்பாடு

ஜெயலலிதாவின் மரணம் குறித்த வாக்குமூலங்களில் முரண்பாடு

by Staff Writer 04-10-2018 | 2:29 PM
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பில், பெறப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசுவாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் தெரிவித்துள்ளது. 2016 செப்டம்பர் 22 ஆம் திகதி போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் அனுமதிக்கப்பட்ட தனியார் வைத்தியசா​லையின் வைத்தியர்கள், ஜெயலலிதாவின் கார் சாரதி, தாதியர் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதி ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இதனிடையே, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் தன் தரப்பு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்களிடையே பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாக விசாரணை ஆணையகம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் மர்மம் நீடிப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மயக்கமான நிலையில் இருந்தபோது இரவு 9.30 மணிக்கு டொக்டர் சிவகுமார், போயஸ் கார்டனுக்கு வந்தார் என சசிகலா வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஆனால், தான் 8.45 மணியளவில் போயஸ் கார்டனுக்கு வந்துவிட்டதாக டொக்டர் சிவகுமார் கூறியுள்ளார். இதற்கிடையே, டொக்டர் 8.30 மணிக்கு போயஸ் கார்டனுக்கு வந்துவிட்டதாகவும் பின்னர் வீட்டின் முதல்தளத்தில் இரவு 10 மணிக்கு அவர் இருந்ததாகவும் ஜெயலலிதாவின் கார் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த மூவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், டொக்டர் சிவகுமார் போயஸ் கார்டனுக்கு வந்த நேரம் பற்றிய குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளதாக விசாரணை ஆணையகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, ஜெயலலிதாவுக்கு மயக்கமேற்பட்டமை தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆறுமுகசுவாமி தலைமையிலான விசாரணை ஆணையகத்தால் 103 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.