அதிகாரிகள் உண்மையை மறைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

குப்பைகளைப் புத்தளத்தில் கொட்டும் திட்டம் தொடர்பில் அதிகாரிகள் உண்மையை மறைப்பதாக பிரதேச மக்கள் குற்றச்சாட்டு

by Staff Writer 04-10-2018 | 8:05 PM
Colombo (News 1st)  கொழும்பின் குப்பைகளைப் புத்தளத்தில் கொட்டும் திட்டம் தொடர்பில் அதிகாரிகள் உண்மையை மறைத்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இன்று அங்கு சென்றிருந்தனர். நாளாந்தம் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயிலூடாக அருவைக்காடு பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அருவைக்காடு பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகக்கூறிய போதிலும், அந்தப் பிரதேசத்தை அண்மித்த சேரக்குழி என்ற பகுதியில் குப்பையைக் கொட்டுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதை நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் அவதானித்தனர். சேரக்குழி மற்றும் கரைத்தீவு ஆகிய இரண்டு கிராமங்களும் புத்தளம் களப்பிற்கு அண்மையில் அமைந்துள்ளதுடன், களப்பிற்கு அண்மையில் மீன்பிடித்தொழிலை மக்கள் பிரதானமான ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் அருவைக்காடு கலா ஓயாவுக்கு அண்மித்த கங்கை வாடி கிராமத்திற்கு அருகில் குப்பையைக் கொட்டுவதற்கே யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் களப்பு மற்றும் தமது கிராமத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்பதால், அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். எனினும், அருவைக்காட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேரக்குழி கிராமத்தில் குப்பையைக் கொட்ட தற்போது முயற்சி மேற்கொள்ளப்படுவதால் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குப்பை சேகரிக்கும் நிலையத்திலிருந்து வௌியாகும் அசுத்தமான நீர் புத்தளம் களப்பில் கலப்பதற்கும் வாய்ப்புள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர். இதன் மூலம் புத்தளத்தில் பிரதானமாக மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்படும் என மக்கள் குறிப்பிட்டனர்.  

ஏனைய செய்திகள்