இடைநிறுத்தப்பட்ட வங்கிக்கணக்கு எந்த அமைச்சருடையது?

15 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கு இடைநிறுத்தம்: தொடர்புடைய அமைச்சர் யார்?

by Bella Dalima 02-10-2018 | 9:17 PM
Colombo (News 1st)  அமைச்சர் ஒருவருக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் பாரிய தொகை நிதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். கேள்வி: அமைச்சர் ஒருவரின் வங்கிக்கணக்கு இடைநிறுத்தப்பட்டு, மத்திய வங்கி அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 15 கோடி ரூபா அந்தக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்த அவரால் இயலவில்லை என்றும் சில இணையத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு மத்திய வங்கி ஆளுநர் பின்வருமாறு பதிலளித்தார்.
அது உண்மையா, பொய்யா என எனக்குத் தெரியாது. எனினும், எனக்கு ஒரு விடயத்தைக் கூற முடியும். நிதி தொடர்பில் ஆராயும் புலனாய்வுக்குழு மத்திய வங்கியில் இருந்த போதிலும், அது பூரண சுதந்திரத்துடனேயே செயற்படுகின்றது. அவர்கள் விசாரணைகளை மேற்கொள்வார்கள். அது தொடர்பில் எனக்கும் தெரியாது. சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்கள் தொடர்பில் எனக்குத் தெரியாது. நிதி மோசடி மற்றும் எதிர்ப்பு நிதியளிப்பு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக மத்திய வங்கியின் ஆளுநரே காணப்படுகின்றார். எனினும், இதில் தலையீடு செய்ய முடியாது. சட்டத்தில் நடைமுறையொன்றுள்ளது. அதன் கீழ் யார் வைப்பிலிட்டது, யாருடையது என்பதை எம்மால் அறிய முடியாது. அங்கு சேவையாற்றும் அதிகாரிகள் அறிந்திருப்பார்கள். சட்டத்திற்கு அமைய அது தொடர்பில் வெளிக்கொணர முடியாது.
15 கோடி ரூபா எனும் பாரிய தொகை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருக்குமாயின் அந்த அமைச்சர் யார்?