துண்டு விழும் தொகை 644 பில்லியன் ரூபா

வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகைக்காக 1944 பில்லியன் ரூபா கடன் பெற தீர்மானம்

by Bella Dalima 02-10-2018 | 7:42 PM
Colombo (News 1st)  கடனை மீள செலுத்துதல் உள்ளிட்ட அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகைக்காக 1944 பில்லியன் ரூபா கடன் பெற வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வருட வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 644 பில்லியன் ரூபா என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 வீதமாகும். 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடனை மீள செலுத்துவதற்கு அடுத்த வருடம் 2057 பில்லியன் ரூபா செலவாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை மீள செலுத்துவதற்காக வரலாற்றில் இலங்கை செலுத்தும் அதிகூடிய தொகை இதுவென நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த வருட ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, அதிவேக வீதி திட்டத்திற்காக 175 பில்லியன் ஒதுக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக வீதியை மத்தளை வரை அபிவிருத்தி செய்தல், கொழும்பு வெளி சுற்றுவட்ட வீதியின் கடவத்தை - கெரவலப்பிட்டிக்கு இடையிலான பகுதியை பூர்த்தி செய்தல், மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகம பகுதி மற்றும் பேலியகொடயில் இருந்து கொழும்பு துறைமுகம் வரை தூண்கள் மீது நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவாயில் பாதை ஆகியவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படவுள்ளது. மொரகஹகந்த மற்றும் உமா ஓயா திட்டத்தை நிறைவு செய்வதற்காக மேலும் 75 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதுடன், கிராம சக்தி, கம்பெரலிய மற்றும் கிராமத்திற்கு ஒரு திட்டம் ஆகிய வேலைத்திட்டங்களுக்காக மேலும் 63 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. பேலியகொட புதிய பாலத்தில் இருந்து நிர்மாணிக்கப்படும் ரயில் மார்க்கத்திற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு 306 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள அதிகூடிய நிதி இதுவென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாகாண சபைகளின் நாளாந்த செலவுகளுக்காக 221 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் அறிக்கைக்கு அமைய, அடுத்த வருடம் அரசாங்கத்தின் மொத்த செலவு 4,376 பில்லியன் ரூபாவாகும். வரவு செலவுத்திட்ட பிரேரணை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.