அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன

உறுப்பினர்களின் வெற்றிடத்தை நிரப்புவதில் நிலவும் தாமதத்தால் அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன

by Staff Writer 01-10-2018 | 9:14 PM
Colombo (News 1st) பதவிக்காலம் நிறைவடைந்த 6 உறுப்பினர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் நிலவும் தாமதம் காரணமாக அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரங்களின் ஒருசில பிரிவுகளை பாராளுமன்றத்தின்கீழ் கொண்டுவரும் நோக்கில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புப் பேரவை மீளவும் ஸ்தாபிக்கப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பது, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள், பொலிஸ்மா அதிபர் சட்டமா, அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட முக்கிய பதவிகளை நியமிப்பதில் அரசியலமைப்புப் பேரவை தலையீடு செய்யவேண்டியது அவசியமாகும். கடந்த செப்டெம்பர் 7ஆம் திகதியில் இருந்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரால் நியமிக்கப்படவேண்டிய 3 உறுப்பினர்களும் சிவில் சமூகத்திலிருந்து நியமிக்கப்படவேண்டிய 3 உறுப்பினர்களும் வெற்றிடமாகியுள்ளனர். உரிய காலத்தில் ஜனாதிபதி தமது பிரதிநிதியாக அமைச்சர் மஹீந்த சமரசிங்கவை நியமித்தார். பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதி ஆகியோர் மட்டும் தொடர்ந்தும் அரசியலமைப்புப் பேரவையில் செயற்பட்டு வருகின்றனர். இந்தப் பேரவை கூடுவதற்கு குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களேனும் இருக்கவேண்டியது அவசியமாகும்.
அரசியலமைப்புப் பேரவையால் கூட முடியாது. கலந்துரையாட முடியாது. எதனையும் செய்ய முடியாது. இந்த நிலைமை நேற்று அல்லது நேற்று முன்தினம் ஏற்படவில்லை. 7ஆம் திகதி ஏற்பட்டது. ஆகவே, புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வெற்றிடம் ஏற்பட முடியாது. இது தீர்மானமிக்க காலகட்டம். இந்த மாதம் புதிய பிரதம நீதியரசரை நியமிக்க நேரிடும். பரிந்துரைகளை முன்வைக்கும் முக்கிய பொறுப்பு அரசியலமைப்புப் பேரவைக்கு உள்ளது. அதனை தற்போது செய்யமுடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தவிசாளர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. இந்தநிலையில், பதில் பிரதம நீதியரசரை நியமிப்பதற்கும் இந்தப் பேரவையின் பரிந்துரை அவசியமாகும்.
அதேநேரம், 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் முன்மொழியப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகளை இதற்கு நியமிக்கக்கூடாது என்ற விடயம் கூறப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் தான். இந்தத் தாமதம் அதிகளவில் தாக்கம் செலுத்தும். முதலில் இதற்கான நியமனங்களை ஜனாதிபதியே மேற்கொண்டார். தற்போது 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு இது தொடர்பில் பொறுப்புள்ளது. எனவே, இதன்மூலம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட பல உயர்பதவிகளுக்கான நியமனங்கள் தாமதமடைவதன் மூலம், முழு அரசாங்கத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்படும். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இதற்காக கொண்டுவரப்படவில்லை என கோப் குழுவின் தலைவர் டி.யூ. குணசேகர தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டமா அதிபரே பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டமா அதிபர், கடந்த காலங்களில் செயற்பட்ட விதங்களைப் பார்க்கும்போது, அவர் பக்கச்சார்பாகவே செயற்பட்டுள்ளார். குறிப்பாக முறிகள் விவகாரத்தின்போது, ஆணைக்குழுவில் சாட்சி வழங்கியபோது சட்டமா அதிபரே அதனை மேற்கொண்டார். அவர்களை பாதுகாக்கும் வகையிலே சாட்சி விசாரணை இடம்பெற்றது. எனவே, இதே விடயம் உயர் நீதிமன்றத்தில் இடம்பெறும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் எம் மத்தியிலும் காணப்படுகிறது என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ண குளிப்பிட்டுள்ளார்.