கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 29-09-2018 | 7:46 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. யாழ். மத்திய பஸ் நிலைய முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, யாழ். பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து யாழ். வைத்தியசாலை வீதியூடாக KKS வீதி, பஜார் வீதி வரை மக்கள் பேரணியாக தனியார் பஸ் நிலையம் வரை சென்று, மீண்டும் யாழ். பஸ் மத்திய நிலையத்தை வந்தடைந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முன்னெடுக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினால், யாழ். நகரில் சுமார் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். வழக்கு விசாரணைகளின்றி பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 16 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை தொடர்பில் வைத்தியர்கள் கண்காணித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த் தனசிங்க தெரிவித்தார். தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அல்லது தமக்கு புனர்வாழ்வளித்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி 8 தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.