4000 மரக்கன்றுகளை நாட்டிய V-FORCE அணியினர் 

களுகங்கைக்கு நிழற்கரம்: 4000 மரக்கன்றுகளை நாட்டிய V-FORCE அணியினர் 

by Staff Writer 29-09-2018 | 8:07 PM
Colombo (News 1st) இரத்தினபுரியில் ஏற்படும் வௌ்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அதனைக் குறைக்கும் நோக்கில் களுகங்கையின் இருபுறமும் இன்று மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இளைய தலைமுறையினரின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்படும் V-FORCE செயற்றிட்டத்தின் மற்றுமொரு தேசிய வேலைத்திட்டமாக இது கணிக்கப்படுகின்றது. V-FORCE மூன்றாம் கட்டமான இந்த வேலைத்திட்டத்தின் கருப்பொருள் - "களுகங்கைக்கு நிழற்கரம்" என்பதாகும் இளைய தலைமுறையினரின் பங்குபற்றுதலுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட V-FORCE அணி இன்று முற்பகல் இரத்தினபுரி வரக்காதொட்ட பாலத்திற்கு அருகில் தமது வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. வரக்காத்தொட்ட பாலத்திற்கு அருகிலிருந்து மேற்பகுதி நோக்கிய களுகங்கையின் கரையோரப்பகுதிகளின் இருமருங்கிலும் இன்று காலை முதல் 4000 மரக்கன்றுகள் 08 அணிகளின் பங்குபற்றுதலுடன் நாட்டப்பட்டன. மதப் பெரியார்கள், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் இதில் இணைந்து கொண்டனர். இம்முறை தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்கள் பலவும் V-FORCE திட்டத்துடன் கரம் கோர்த்ததுடன், பிரென்டிக்ஸ் நிறுவனம் மகத்தான ஒத்துழைப்பை நல்கியது. போக்குவரத்து பொலிஸாரும் பாரிய ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். இரத்தினபுரி பிரதேச செயலாளர் காரியாலயம், மொரட்டுவை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவ மாணவிகள், செஞ்சிலுவை சங்கத்தினர், பொலிஸ் உயிர்ப்பாதுகாப்புப் படையினர், இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பு, பசுமை உதயம் தேசிய அமைப்பு மற்றும் Yfm ஆகியன இம்முறை V-FORCE உடன் கரம் கோர்த்திருந்தன. MIM எனும் Maharaja Institute of Management நிறுவனத்தின் டிப்ளொமா மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர். கரையோர அரிப்பைக் குறைத்து சுற்றியுள்ள பிரதேசங்களின் பாரிய பிரச்சினையாகத் திகழும் வௌ்ள அபாயத்திற்கு தீர்வு காண்பதே இதன் நீண்டகால நோக்கமாகும். மக்கள் சக்தியின் முதற்கட்டம் சீகிரியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டம் நீர்கொழும்பு - முஹாந்திரம்பிட்டி களப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.  

ஏனைய செய்திகள்