இந்திய அணி வென்ற 07வது ஆசிய கிண்ணம்

இந்திய அணி வென்ற 07வது ஆசிய கிண்ணம்

by Staff Writer 29-09-2018 | 9:50 AM

ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி 7 ஆவது முறையாக கிண்ணத்தை சுவீகரித்தது.

இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 3 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது. டுபாயில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48 தசம் 3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 121 ஒட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தது. பங்களாதேஷ் அணி 17 தசம் 5 ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்தது. 120 ஒட்டங்களை பெற்ற நிலையில் முதல் விக்கட்டினை இழந்த பங்களாதேஷ் அணி, அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்தது. 39 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது. 7 வீரர்கள் 10 க்கும் குறைவான ஒட்டங்களையே பெற்றனர். இதில் இந்திய அணியின் விக்கட் காப்பாளர் மஹேந்திர சிங் தோனி, இரண்டு முக்கிய விக்கட்டுக்களை வீழ்த்தினார்,. இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் 800 விக்கட்டுக்கள் என்ற புதிய மைல்கல்லை தோனி எட்டியுள்ளார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 35 ஓட்டங்களை எடுத்த போது முதல் விக்கட்டினை இழந்தது. ஷிகர் தவான் 15 ஓட்டங்களுடன் சவுமியா சர்காரின் பந்துவீச்சில் வௌியேறினர். அம்பத்தி ராயுடு 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் 37 ஓட்டங்களுடன் வௌியேறினார். ரோஹித் ஷர்மா 48 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். மகேந்திர சிங் தோனி 36 ஓட்டங்களை குவித்தார 169 ஓட்டங்களுக்குள் இந்திய அணி 5 விக்கட்டுக்களை இழந்து சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. இறுதிப் பந்தில் ஒரு ஒட்டம் தேவைப்பட, இந்திய அணிக்கு உதிரி ஓட்டத்தினால் ஓர் ஓட்டம் கிடைத்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியதுடன் 7 ஆவது தடவையாகவும் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது. இதன்மூலம் ஆசிய கிண்ண தொடரில் அதிக முறை சம்பியன் பட்டம் வென்ற அணியாக இந்திய அணி வெற்றிநடை போடுகின்றது.