இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் வரவேற்கத்தக்கது 

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை வரவேற்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் தெரிவிப்பு

by Staff Writer 29-09-2018 | 4:12 PM
Colombo (News 1st) ஜனநாயக நல்லிணக்கம் , சட்டம், மனித உரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். நியூயார்க் நகரில் நேற்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயங்கள் குறித்து ஐ.நா பிரதிநிதிகள் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளனர். நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேற்று மாலை ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸை சந்தித்துள்ளார். ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த மூன்றரை வருடங்களாக பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம், எதிர்வரும் நாட்களிலும் பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றுள்ள வெற்றியைக் கருத்திற்கொண்டு புதிய கோணத்தில் தமது நாட்டை நோக்குமாறு சர்வதேசத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது, இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் ஐ.நா செயலாளர் நாயகம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். காலநிலை மற்றும் வானிலை மாற்றத்தினால் நாடு எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் பட்ரீஷீயா ஸ்கொட்லன்ட்டையும் ஜனாதிபதி நேற்று மாலை சந்தித்துள்ளார். பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடாக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளை எதிர்வரும் நாட்களிலும் வழங்குவதாகத் தெரிவித்துள்ள செயலாளர், நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதி வழங்கியுள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு துறையில் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கலுக்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பட்ரீஷீயா ஸ்கொட்லன்ட் கூறியுள்ளார். சட்டவிரோத போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை தௌிவுபடுத்திய ஜனாதிபதி, பொதுநலவாய அமைப்பின் அனைத்து நாடுகளுக்கும் இது அனுகூலமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.