சாட்சி விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

by Staff Writer 28-09-2018 | 5:12 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. அவன்ற் கார்ட் மெரிடைம்ஸ் சர்விசஸ் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கியதனூடாக அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வென்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இந்த மேன்முறையீட்டிற்கு பகிரங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில் மனுவை எதிர்வரும் 19 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு முறைப்பாட்டாளர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.