அவுஸ்திரேலியாவில் கைதான இலங்கை இளைஞருக்கு பிணை 

அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 28-09-2018 | 3:31 PM
Colombo (News 1st) பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்களில் காணப்படும் கையெழுத்து அவருடையது அல்ல என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மொஹமட் கமர் நிசாம்டீன் எனப்படும் இலங்கையரை பிணையில் விடுவிப்பதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பல்கலைக்கழகத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த இளைஞர் கடந்த மாதம் 30 ஆம் திகதி பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழகத்தில் சேவையாற்றும் ஊழியருக்கு குறித்த இளைஞரின் புத்தகமொன்று கிடைத்துள்ளது. அதில் தாக்குதல் மேற்கொள்வதற்கு இலக்கு வைத்துள்ள நபர்களின் பெயர்கள் மற்றும் இடங்களின் தகவல்கள் காணப்பட்டதை அடுத்து அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதற்கமைய, நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தக்காரராக செயற்படும் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இளைஞரின் இலக்கு தொடர்பான ஆவணங்களில் மெல்கம் டேர்ன்புல், ஜூலி பிஷப் போன்ற அவுஸ்திரேலியாவின் பிரபல அரசியல்வாதிகளும் உள்ளமை அவுஸ்திரேலிய பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.