லசந்த கொலை: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

லசந்த கொலை: விசாரணைகளின் மேலதிக அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 27-09-2018 | 4:28 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் மேலதிக அறிக்கையொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கொலைச்சம்பவம் தொடர்பில் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி, மகள் மற்றும் சகோதரர்களின் சாட்சிகளும் குறித்த அறிக்கையில் அடங்குவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஆகியோரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுக்கு அறிவித்துள்ளது. கொலைச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சுகதபால, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சேனாநந்த உதுலாகம ஆகியோர் இன்றில் மன்றில் ஆஜராகியிருந்தனர். திஸ்ஸ சுகதபாலவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.