வெப்பத்தால் உருளைக்கிழங்கு செய்கை பாதிப்பு

பெரும்போகத்திற்கு சாதகமான வானிலை: மலைநாட்டில் இரவில் நிலவும் வெப்பத்தால் உருளைக்கிழங்கு செய்கை பாதிப்பு

by Bella Dalima 27-09-2018 | 8:11 PM
Colombo (News 1st) பெரும்போகத்தை ஆரம்பிக்கத் தயாராகவுள்ள விவசாயிகள் அடுத்து வரும் மாதங்களில் சாதகமான வானிலையை எதிர்பார்க்க முடியும். இன்னும் சில நாட்களில் இடைநிலை பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றம் ஆரம்பமாகவுள்ளது. 13 ஆவது தெற்காசிய காலநிலை முன் அறிவிப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமானது. இரண்டாவது இடைநிலை பருவப்பெயர்ச்சி மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வானிலை நிபுணர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், தெற்காசிய நாடுகளின் வானிலை தொடர்பிலான முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டாவது இடைநிலை பருவப்பெயர்ச்சி மாற்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை மீது தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் வருடாந்த மழை வீழ்ச்சியில் சுமார் 30 வீதத்தை இந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதி வங்காள விரிகுடாவை அண்மித்து காற்றழுத்தத் தாழ்வு உருவாகும் காலப்பகுதியாகும். இந்த வருடத்தில் அவ்வாறான காற்றழுத்தத் தாழ்வு உருவாகினால் சாதகமான அளவில் பாரிய மழை வீழ்ச்சி கிடைக்கும் என நம்புவதாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்தார். காலநிலை மாற்றத்துடன், வேறுபட்ட வானிலையை எதிர்நோக்கவும் நேரிடும். இந்த வேறுபட்ட காலநிலை மாற்றத்தினால் கடந்த நாட்களில் கடும் வறட்சி நிலவியது. இதேவேளை, மத்திய மலைநாட்டில் இரவு வேளைகளில் வெப்பம் அதிகரிப்பதால் உருளைக்கிழங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
இரவு வேளையில் வெப்பம் அதிகரிக்கின்றமை உருளைக்கிழங்கு செய்கையில் அதிக தாக்கத்தை செலுத்தும். ஏனெனில் பகல் வேளையில் தாவரங்களின் ஔிச்சேர்க்கை இடம்பெறுகின்றது. அவ்வாறு உருவாகும் உணவு களஞ்சியப்படுத்தப்படுகின்றது. இரவு வேளையில் வெப்பம் அதிகரிக்கும் போது சுவாச வேகம் அதிகரிக்கும். சுவாச வேகம் அதிகரிக்கும் போது ஏற்கனவே களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவே அநாவசியமாக விரையமாகும். ஆகவே, அது கிழங்கின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
என பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே குறிப்பிட்டார்.