சேரிப்புற மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம்

சேரிப்புற மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்திற்கு உதவி வழங்குவதாக மலேஷிய பிரதமர் உறுதி

by Staff Writer 27-09-2018 | 6:28 AM
மாநகர அபிவிருத்தித் திட்டத்தின கீழ் நாட்டில் முன்னெடுக்கப்படும் சேரிப்புற மக்களுக்கான புதிய வீடமைப்பு திட்டத்திற்கு உயர்ந்தபட்ச உதவிகளை வழங்குவதற்கு மலேஷிய பிரதமர், கலாநிதி மஹதீர் மொஹம்மட் உறுதி வழங்கியுள்ளார். நியூயோர்க் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடும்போது மலேஷிய பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் மலேஷிய பிரதமர் இதன்போது கூறியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மலேஷியா தொடர்பில் இலங்கை முன்னெடுக்கும் சிநேகபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் மஹதீர் மொஹம்மட் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேவேளை, தொற்றாநோய்களைத் தடுப்பதற்காக ஐ.நா. சபைக்குட்பட்ட நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் சாதகங்கள் குறித்து ஆராயும் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) பங்கேற்கவுள்ளார். அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படும் தொற்றாநோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பரிசீலித்தல் மற்றும் அவை தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல் என்பன இதன்போது இடம்பெறவுள்ளன. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக நடைபெறும் இந்த அமர்வு இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஐ.நா. சபையின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்குபற்றும் அனைத்து அரச தலைவர்களுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வழங்கப்படும் விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார். நியூயோர்க்கில் நடைபெற்ற இந்த இராப்போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரின் பாரியாரை, அமெரிக்க ஜனாதிபதியும் அவரின் பாரியாரும் வரவேற்றனர். ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் கலந்துகொள்ள நியூயோர்க் நகரிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 29 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.