சர்வதேசத்திடம் நாம் கெஞ்சவில்லை

சர்வதேசத்திடம் கெஞ்சவில்லை; நேரடிக் கொள்கையின் கீழ் உள்ளோம்: எஸ்.எம்.மரிக்கார்

by Staff Writer 27-09-2018 | 8:57 PM
Colombo (News 1st) ஜனாதிபதியுடன் நியூயார்க் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குக் கருத்துத் தெரிவித்தார். கேள்வி: ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றி உலகிற்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்தார். சர்வதேச ரீதியில் எமக்கு கிடைக்கும் பதில் நன்மையாக அமையுமா? தவறாகுமா? இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? எஸ்.எம்.மரிக்கார்: பிரதான இரண்டு விடயங்களின் கீழ் ஜனாதிபதி உரையாற்றினார். பாலஸ்தீனத்திற்கு நட்புறவு நாடாக இலங்கை ஒத்துழைப்பு வழங்குவது. அத்துடன், ஒபெக் நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியமாகும். ஒபெக் உதவி தொடர்பில் நான் நன்கு அறிந்த ஒருவர். எனது தொகுதியில் வீதிகளை அமைக்க 8 பில்லியனை ஒபெக் வழங்குகின்றது. மேலும், 400-க்கும் அதிக பாலங்களை அமைப்பதற்கு ஒபெக் நாடுகள் நிதி வழங்கத் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் ஒபெக் நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்காக எமது உறவைத் தொடர்ந்து பேணுவதும், இலங்கை இறையாண்மையுள்ள நாடாக எமது எண்ணக்கருவிற்காக முன்நிற்பதும் பாராட்ட வேண்டிய விடயமாகும். ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் ஏதேச்சையாக ஈரான் ஜனாதிபதியை நேற்று சந்தித்தார். அவர் ஜனாதிபதியிடம் வந்து உரையாற்றினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து மேற்கத்தேய நாடுகள் எவ்வாறான கருத்துக்களை கூறுவார்கள் என்பதை நாம் அவதானித்தோம். சர்வதேசத்தினை ஜனாதிபதி முட்டாள்களாக்கவில்லை என்பது அவர்களின் கருத்துக்களுக்கு அமைய விளங்குகின்றது. சர்வதேசத்திடம் கெஞ்சவுமில்லை. நேரடிக் கொள்கையின் கீழ் நாம் உள்ளோம்.