காட்டு விலங்குகளின் பாதிப்பைத் தடுக்கத் தீர்வு

காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கான தீர்வை வழங்குவதாக ஷேன்கன் ஃபான் உறுதி

by Staff Writer 27-09-2018 | 1:26 PM
காட்டு விலங்குகளால் பயிர் நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கான தீர்வை வழங்குவதாக, சர்வதேச உணவுக் கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார். நியூயோர்க்கில் சர்வதேச உணவுக் கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஷேன்கன் ஃபான்னுக்கும் (Shenggen Fan) ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. பயிர் செய்யப்படும் மரக்கரி வகைகள், பழங்கள் ஆகியவற்றின் 40 வீதமான அறுவடை, காட்டு விலங்குகளால் அழிவடைவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக, வருடாந்த அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான தீர்வைக் காணவேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார். உலகின் பல நாடுகள் இவ்வாறான நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இதன்போது ஷேன்கன் ஃபான் தெரிவித்துள்ளார். இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் வழங்கப்பட்ட முன்னோட்டத்தை அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்கு தீர்வை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். போசாக்குக் குறைப்பாட்டை நிவர்த்திப்பது, தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களுக்கு உதவி வழங்கத் தயார் எனவும் சர்வதேச உணவு கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நிதியுதவியை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அதற்கான உடன்படிக்கையை விரைவில் தயாரிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.