ஐ.நா அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கை

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கை கைச்சாத்து

by Bella Dalima 27-09-2018 | 7:05 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகத் தலைவர்கள் பலரை சந்தித்து இலங்கை தொடர்பில் பல முக்கிய விடயங்களைக் கலந்துரையாடியுள்ளார். மலேசியப் பிரதமர் மஹதீர் மொஹமட் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார விருத்திக்காக எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என மலேசியப் பிரதமர் இதன்போது கூறியுள்ளார். மாநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும் மலேசியப் பிரதமர் உறுதியளித்துள்ளார். இதேவேளை, காட்டு விலங்குகளால் பயிர் நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கான தீர்வை வழங்குவதாக சர்வதேச உணவுக் கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார். சர்வதேச உணவுக் கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சேன்கன் ஃபானுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நியூயார்க்கில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. பயிர் செய்யப்படும் மரக்கறி வகைகள், பழங்கள் ஆகியவற்றின் 40 வீதமான அறுவடை காட்டு விலங்குகளால் அழிவடைவதாக இந்த சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக வருடாந்த அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான தீர்வைக் காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வழங்கப்பட்ட தீர்வுகளின் அனுபவங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச உணவுக் கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் சமூக அபிவிருத்தியை நேரடியாகப் பாதிக்கும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சர் திலக் மாரப்பன உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். சமூக முன்னேற்றத்திற்கான நிதியம் மற்றும் சமூக தொழில் முனைவோருக்கான நிதியம் ஆகியன இதன் ஊடாக நிறுவப்படவுள்ளன. இதன் ஊடாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இலங்கைத் திட்டங்களுக்கான தனியார் பிரிவையும் இணைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.