அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகள் 14 ஆவது நாளாக உண்ணாவிரதம்: விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 27-09-2018 | 8:38 PM
Colombo (News 1st)  தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அநுராதபுரம் சிறைச்சாலையில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை தொடர்பில் வைத்தியர்கள் கண்காணித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்தார். தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி அல்லது புனர்வாழ்வளித்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி 8 தமிழ் அரசியல் கைதிகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி காலிமுகத்திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அருனி சோமரத்னவிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர். இதேவேளை, அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணி முதல் 12.30 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது மகஜர் அடங்கிய கோரிக்கையை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.