மங்களவின் ட்வீட் குறித்து மஹிந்த ராஜபக்ஸ

தவறான முன்னுதாரணம்: கொழும்பு பேராயரின் கருத்து தொடர்பான மங்களவின் ட்வீட் குறித்து மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 26-09-2018 | 9:22 PM
Colombo (News 1st) அமைச்சர் மங்கள சமரவீரவின் டுவிட்டர் பதிவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (26) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டார். கொழும்பு பேராயரின் மனித உரிமைகள் தொடர்பான கருத்து குறித்து அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார்.   பேராயர் பிரபல்யமடைவதற்காக தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மங்கள சமரவீரவின் இந்தக் கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துக் கூறினார்.
உண்மையிலேயே இது அரசாங்கத்தின் நிலைப்பாடா என்பதை நாம் அறிய வேண்டும். ஏனெனில், அவர் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே வெளியிட்டுள்ளார். அவர் நிதி அமைச்சராகவும் ஊடகங்களுக்கு பொறுப்பாகவும் இருக்கின்றார். அமைச்சர் என்ற வகையில் அவர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கூறினாரா என்பதை நாம் அறிய வேண்டும். தற்போது ஜனாதிபதி நாட்டில் இல்லை. பிரதமர் விளக்கமளிக்க வேண்டும். அவர் இதுவரை அவ்வாறு செய்யவில்லை. இதனைத் தவறான முன்னுதாரணமாகவே நாம் காண்கின்றோம்.