ஜனாதிபதியை கொலை செய்ய சதி: கைதான இந்தியப் பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்
by Staff Writer 26-09-2018 | 9:04 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை குறித்து தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இந்தியப் பிரஜை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜை தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்வருமாறு தௌிவுபடுத்தினார்.
இந்த இந்திய பிரஜை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பணம் கிடைக்கும் முறை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தௌிவான பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால் அவருக்கு பணம் கிடைத்த விதம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்றது. கொலைச்சதி தொடர்பில் எவ்வித விடயத்தையும் குறித்த இந்திய பிரஜை வௌிக்கொணரவில்லை. நாமல் குமார நடத்திய ஊடக சந்திப்பு, தொலைபேசி கலந்துரையாடல்களுக்கு அமைய ஊடகங்களில் இடைக்கிடையே வௌியான தகவல்களுக்கு அமைய சிலர் மீது அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்த இந்தியப் பிரஜைக்கு விளங்கியுள்ளது. அது தொடர்பில் வினவவே அவர் நாமல் குமாரவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இந்த விடயத்தை பாரதூரமானதாக கவனத்திற்கொண்டு, அவரால் இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய குறித்த நபரின் பின்புலம் தொடர்பில் ஆராயுமாறு இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதை சான்றுபடுத்துவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.