பிரபாகரன் வந்து கூற வேண்டுமா?

இனப்படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் என பிரபாகரன் வந்து கூற வேண்டுமா: பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி

by Bella Dalima 26-09-2018 | 5:55 PM
Colombo (News 1st)  இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் என பிரபாகரன் வந்து கூற வேண்டுமா என இந்திய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ராஜிவ் காந்தி படுகொலைக்கும் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் காரணம் காங்கிரஸ் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதன்போது கூறியுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கூறுவதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்கள் ஏழு பேரையும் வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ள பொன். ராதாகிருஷ்ணன், ஆளுநரின் தீர்மானத்திற்கு அமைய அவர்களை விடுதலை செய்தால் சிக்கல் இல்லை எனவும் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை அவர் பொருட்படுத்தவில்லை என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போரின்போது இலங்கை இராணுவத்திற்கு திமுக-வும் காங்கிரஸூம் ஆதரவாக செயற்பட்டது எனத் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இதன்போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். சேலத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் கொள்ளைத்தனமாக பதவிக்கு வந்தவர் என குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளித்த தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சியாளர்களுக்கு துணிவிருந்தால் தங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழலில் ஈடுபடும் தமிழக முதல்வர் தி.மு.க-விற்கு எதிராக போராட்டம் நடத்தி ஜனநாயகத்தை நகைச்சுவைப் பொருளாக்குவதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ கூறிய விடயத்தை முழுமையாக அறிந்துகொள்ளாமல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈழப்பிரச்சினையில் 1956 ஆண்டு தொடக்கம் தொடர்ந்தும் குரல்கொடுத்து, ஐ.நா சபைக்கு மனு அளித்த இயக்கம் யார் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழர்களும் நன்கறிவார்கள் என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.