அஞ்சலோ மெத்யூஸூக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை

அணித்தலைவராக தினேஷ் சந்திமால்: அஞ்சலோ மெத்யூஸூக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை

by Staff Writer 26-09-2018 | 8:01 PM
Colombo (News 1st) இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழாத்தில் அஞ்சலோ மெத்யூஸூக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான இலங்கை குழாம் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. 15 வீரர்கள் கொண்ட இந்தக் குழாத்தில் உபுல் தரங்க, சதீர சமரவிக்ரம, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க, திசர பெரேரா, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க, நுவன் பிரதீப், குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குசல் மென்டிஸ், திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், ஷெஹான் மதுஷங்க, ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் மேலதிக வீரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 22 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் 888 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்ற வீரராகப் பதிவான முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மெத்யூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியிலிருந்து நீக்கப்பட்டமை எந்தளவிற்கு நியாயமான தீர்மானமென்பது சந்தேகத்திற்குரியதாகும்.