முதல் சம்பளத்தை வெள்ளநிவாரணத்திற்கு வழங்கிய துருவ்

முதல் சம்பளத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய துருவ் விக்ரம்

by Bella Dalima 25-09-2018 | 9:01 PM
வர்மா படத்திற்காக தான் பெற்ற முதல் சம்பளத்தை நடிகர் விக்ரமின் மகன் துருவ் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ், வர்மா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், துருவ் விக்ரமின் தோற்றமும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் துருவ்வை அறிமுகம் செய்து வைக்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, விக்ரம், துருவ் விக்ரம், மேகா சவுத்ரி, ரைசா வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையே, வர்மா படத்தில் நடித்ததற்காக தான் பெற்ற முதல் சம்பளத்தைக் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார் துருவ். சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாகத் தன் முதல் பட சம்பளத்தைத் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா மற்றும் இணை தயாரிப்பாளர் அனூப்புடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து கையளித்துள்ளார்.