எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் என்னுடையதல்ல

போட்டியின் போது எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் தன்னுடையதல்ல என அஞ்சலோ மெத்யூஸ் தெரிவிப்பு

by Bella Dalima 25-09-2018 | 8:33 PM
Colombo (News 1st)  இலங்கை கிரிக்கெட் தலைமைப் பயிற்றுநர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் தாம் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அஞ்சலோ மெத்யூஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை குழாத்தில் அஞ்சலோ மெத்யூஸ் பெயரிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் இன்று தகவல் வெளியானது. ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்வியை கருத்திற்கொண்டு அணித் தலைமையிலிருந்து விலகுமாறு கிரிக்கெட் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் அணித்தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக தமது கடிதத்தில் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கான முழுப்பொறுப்பும் இறுதியில் தன் மீது சுமத்தப்பட்டுள்ளதாக மெத்யூஸ் குறிப்பிட்டுள்ளார். போட்டியின் போது எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் தன்னுடையதல்ல என்றும் பிரதம பயிற்றுநர் மற்றும் தெரிவுக்குழுத் தலைவர் உட்பட அணியின் ஒருங்கிணைந்த தீர்மானம் என்றும் அஞ்சலோ மெத்யூஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். சகல தோல்விகளுக்குமான பொறுப்பையும் தலைவர் மீது சுமத்துவதனை தம்மால் ஏற்க முடியாவிட்டாலும், பயிற்றுநர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையினால் அணித்தலைமையிலிருந்து விலகுவதாக அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இங்கிலாந்து தொடருக்கான இலங்கை குழாத்தில் அஞ்சலோ மெத்யூஸ் பெயரிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களிலும் பெரும்பாலான வெளிநாட்டு ஊடகங்களிலும் இன்று தகவல்கள் வெளியாகின. இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.