பிரதிப் பொலிஸ்மா அதிபரை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 25-09-2018 | 6:51 AM
Colombo (News 1st) பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவரை ​பரிந்துரை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய, புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் நாம் வினவியபோது, பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய, குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீதான கொலை முயற்சி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொலை முயற்சி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாலக்க டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நாமல் குமார ஆகியோர் முன்னெடுத்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் அரச பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நாமல் குமாரவின் இல்லத்திற்கு வருகை தந்ததாக கூறப்படும் நபரொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் குமார வழங்கிய தகவலுக்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் இந்தியப் பிரஜை எனவும் டெய்லி மிரர் பத்திரிகையில் நேற்று செய்தி வௌியிடப்பட்டிருந்தது.

ஏனைய செய்திகள்