நாமல் குமாரவிடம் இரசாயனப் பகுப்பாய்வு 

நாமல் குமாரவை இரசாயனப் பகுப்பாளரிடம் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

by Staff Writer 25-09-2018 | 8:24 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான தொலைபேசி உரையாடல் குறித்த வௌிக்கொணர்வு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த தொலைபேசி உரையாடலை அம்பலப்படுத்திய ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜையை கைது செய்ததாக கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. தோமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய, ஜனாதிபதிக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என சந்தேகிக்கக்கூடிய பல தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த வாக்குமூலம் தொடர்பில் சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் குமார என்பவரை நாளை முற்பகல் அரச இரசாயனப் பகுப்பாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.