சரத் பொன்சேக்காவிடம் வாக்குமூலம் பதிவு

சரத் பொன்சேக்காவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 25-09-2018 | 7:54 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக ஃபீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேக்கா இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் இரண்டாவது தடவையாக இன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட காலத்தில் சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக செயற்பட்டார். இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேக்காவிடம் நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தனர். பதுவத்தை பாதுகாப்பு இல்லம் தொடர்பில் தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கடந்த தவணையின்போது கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பில் இராணுவத்தினரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என தற்போதைய பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மன்றுக்கு தெரிவித்துள்ளனர். எனினும், இது தொடர்பான சில ஆவணங்கள் தமக்கு கிடைக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்த வாக்குமூலமும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.