'சர்வதேச சிறந்த நடிகர்’ விருதுக்குரியவராகும் விஜய்

சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தெரிவு

by Chandrasekaram Chandravadani 23-09-2018 | 11:22 AM
இந்த வருடத்திற்கான சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100ஆவது படமான மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவே இந்த சர்வதேச சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014ஆம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. இந்தநிலையில், லண்டனிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழாவில், சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதுக்காக நடிகர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலகளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டு அட்லி - விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வௌியாகிய மெர்சல் திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருந்தமை நினைவுகூரத்தக்கது.