சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-09-2018 | 6:28 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ராஜபக்ஸ குடும்பத்தின் எந்த உறுப்பினரை நிறுத்துவதற்கு இந்தியா விரும்புகிறது என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு, வேறு நாடுகளால் தம்மை நிர்வகிக்க முடியாது எனவும் இலங்கையைத் தவிர வேறு தரப்பினரை நம்பவில்லை எனவும் முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 02. இந்த வருடம் முதல் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னர், செயன்முறை பரீட்சைகளை நடாத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 03. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக தயாசிறி ஜயசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், கட்சியின் புதிய அமைப்பாளர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர்கள் சிலரும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். 04. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 05. அத்தனகல்ல ஓயாவை ஊடறுத்துள்ள, அத்தனகல்ல – கோனகல பாலம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்போது, பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. வௌிநாட்டுச் செய்திகள் 01. ஈரானின் தென் மேற்கே அமைந்துள்ள அஹ்வாஸ் (Ahvaz) நகரில் இராணுவ அணிவகுப்பின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 02. சீனாவில் 4000- இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. விளையாட்டுச் செய்தி 01. எதிர்வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.