மாலைதீவுகளின் சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்தல் நாளை: மாணவர்களுக்கு அச்சுறுத்தல்
by Staff Writer 22-09-2018 | 8:09 PM
Colombo (News 1st) மாலைதீவுகளின் ஜனாதிபதித் தேர்தல் நாளை (23) நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் மாலைதீவுகளின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மீண்டும் போட்டியிடுவதுடன், அவரை எதிர்த்து இப்ராஹிம் மொஹமட் களமிறங்கியுள்ளார்.
மாலைதீவுகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகின்ற நிலையில், இலங்கையிலுள்ள மாலைதீவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகாரிக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி இலங்கையிலுள்ள மாலைதீவுகளின் தூதுவர், இங்குள்ள மாலைதீவு மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மாலைதீவுகளின் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் அஹமட் நசீமின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில்அறிவதற்காக இலங்கைக்கான மாலைதீவுகள் தூதுவரை தொடர்பு கொள்வதற்கு நியூஸ்ஃபெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இந்த விடயத்தில் பதிலளிக்குமாறு ட்விட்டர் கணக்கிலும் நியூஸ்ஃபெஸ்ட் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மவ்மூன் அப்துல் கயூம் பதவி விலகியதுடன், முதற்தடவையாக பல்வேறு கட்சிகள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியாகவே மாலைதீவில் நிலவிவருகின்ற இந்த அரசியல் நெருக்கடி கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியதை அடுத்து மீண்டும் வலுப்பெற்றது.
இந்த நிலைமை மாலைதீவுக்குள் உயர் நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான அதிகாரப்போட்டியாக சுட்டிக்காட்டப்பட்டாலும், இது இந்து சமுத்திரத்தில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அதிகாரப் போட்டிக்கான ஒரு ஆரம்பம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.