சீனாவின் கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளோம்

சீனாவின் கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளோம்: மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 21-09-2018 | 9:33 PM
Colombo (News 1st) எதிர்வரும் 23 ஆம் திகதி மாலைதீவின் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் கருத்துத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் தெரிவித்திருந்ததாவது,
தேர்தல் தொடர்பான முறையில் மந்தகதி அல்லது சிக்கல் காணப்படுவதாக ஐரோப்பிய சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியன இனங்கண்டுள்ளன. அதனை ஆராய்வதற்காக மாலைதீவின் தேர்தல்கள் ஆணைக்குழு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அவர்களின் சுயாதீனம் மற்றும் திறமையை நிரூபிப்பதற்கு முடியாமற்போயுள்ளது. தேர்தலை அறிக்கையிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.  வௌிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பொருளாதார அபிவிருத்திக்கான கொள்கைவாதி ஆவார். அந்நாட்டில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 1.3 பில்லியன் டொலர் கடனூடாக முன்னெடுக்கப்படுகின்றமை அண்மையில் கண்டறியப்பட்டது. அந்தக் கடனில் மாலைதீவின் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் உள்ளடக்கப்படுகின்றனர். இந்நிலையில், சீனத் தலையீடு குறித்து மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் பின்வருமாறு தெரிவித்தார்,
மாலைதீவு தொடர்பில் சீனாவிற்கு பாரிய அக்கறையுள்ளது. நாங்கள் தற்போது கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளோம். இது ஒரு பாரிய செயற்றிட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. முதலாவதாக விலை மனு கோரலின்றி குத்தகை வழங்கப்படுகின்றது.  அதன்பின்னர் குத்தகை விலையை அதிகரித்து ஏனைய போட்டியாளர்களின் சந்தர்ப்பத்தை இழக்கச் செய்கின்றனர். சீனாவின் வர்த்தக வங்கிகள் ஊடாக பாரியளவில் கடன்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அந்தக் கடனை எப்போது திருப்பி செலுத்துவார்களோ. எங்களுக்கு முடியாது போனாலும் கடனைத் திருப்பி செலுத்தியாக வேண்டும். இறுதியில் நாட்டின் இறையான்மை அழிக்கப்படும்.