ஆற்றுப்படுகை தொடர்பிலான ஆய்வறிக்கை வௌியீடு

உலக மரபுரிமையான ஆற்றுப்படுகை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் - பேராதனை பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த ஆய்வறிக்கை வெளியீடு

by Bella Dalima 20-09-2018 | 5:21 PM
Colombo (News 1st) ''மக்கள் சக்தி குளங்கள் தோறும்'' திட்டத்தின் ஆய்வறிக்கை இன்று பிற்பகல் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. மக்கள் சக்தி குழுவினரும் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். இலங்கையின் நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தின் மகத்துவத்தைத் தேடி ''மக்கள் சக்தி குளங்கள் தோறும்'' ஆய்வுத் திட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது. இதன் இரண்டாவது கட்டம் கடந்த ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்டதுடன், பின்னர் ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகின. ஆற்றுப்படுகைக் கட்டமைப்பின் கீழுள்ள வாவிகள் மற்றும் நீரேந்துப் பகுதிகளை வரைபடத்தில் உள்ளடக்கியமை இதில் முக்கியத்துவம் பெறுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தின் பெல்லங்கடவல ஆற்றுப்படுகை கட்டமைப்பே இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல், நியூஸ்ஃபெர்ஸ்ட் பொது முகாமையாளர் யசரத் கமல்சிறி, மக்கள் சக்தி குழுவினர் மற்றும் பெல்லன்கடவல கிராம மக்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க, ஆய்வறிக்கையை மக்கள் சக்தி குழுவினரிடம் கையளித்தார், மக்கள் சக்தி குளங்கள் தோறும் இணையத்தளமும் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னர் ஆட்சியின்போது பின்பற்றப்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தை மக்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். எனினும், அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை புதிதாகக் கூற வேண்டிய அவசியமில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையின் ஆற்றுப்படுகை கட்டமைப்பை உலக மரபுரிமையாகப் பிரகடனம் செய்ய யுனெஸ்கோ அமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.     பண்டைய இலங்கையின் நீர் நிலைகளை மையப்படுத்திய நாகரீகம் உலகளாவிய ரீதியில் சிறந்த ஓர் கட்டமைப்பு என்ற அங்கீகாரத்தினைப் பெற்றிருந்தது. மிகவும் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்த சிறுகுளங்களின் வலையமைப்பு, கால்வாய்கள் மற்றும் பாரிய நீர் நிலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு பயன்பாட்டை வழங்கி வந்த நிலையில், கடந்த நுற்றாண்டு காலத்தில் அல்லது அதற்கு பின்னரான காலப் பகுதியிலேயே அழிவிற்கு உள்ளாகியுள்ளது. இலங்கையின் சிறிய குளங்களின் கட்டமைப்பு அழிவடைந்தமையானது நீர் முகாமைத்துவம், தேக்கி வைத்தல் மற்றும் மீள் விநியோகம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை செலுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று நாடு வறட்சியாலும் வௌ்ளப்பெருக்காலும் பாதிக்கப்படுவதுடன், நீர் வளத்தினை பாதுகாப்பதிலும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. முறையான நீர்வழங்கல் இன்றி அடிக்கடி நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றமையால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கிழக்கின் உணவுக்களஞ்சியம் என பெயர்பெற்றிருந்த தேசம் இன்று அதன் சொந்த மக்களுக்கே உணவளிக்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த யதார்த்தத்திற்கு முகங்கொடுத்து, தேசம் அதிலிருந்து மீண்டௌ வேண்டும். கிராமங்களின் உணவு மற்றும் நீர்வளப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே பண்டைய இலங்கையின் நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு நிறுவப்பட்டிருந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கக்கூடிய இந்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக மழை வீழ்ச்சி தொடர்பான முன்கணிப்பு, நீரியல் பண்புகள், மற்றும் ஸ்தல விபரங்கள் குறித்து எமது முன்னோர்கள் கொண்டிருந்த ஆழமான அறிவு பிரமிக்கவைப்பதனை அண்மைய ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. எமது அரசர்கள் சிறு குளங்களை நிர்மாணித்து கால்வாய்கள் வழியாக அவற்றை நீர்த்தேக்கங்களுடன் இணைத்தனர். ஒவ்வொரு குழத்திற்கும் தனிப்பட்ட, பிரத்தியேகக் காரணங்கள் இருந்தன. அவை அனைத்துமே விவசாயத்திற்கு பாவிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு, சில குளங்கள் மிருகங்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டன. அதாவது, அந்த குளங்களின் உதவியுடன் யானை போன்ற பெரிய விலங்கினங்கள் காட்டில் அமைதியாக வாழ முடியும். அவை உணவைத் தேடியோ வேறு காரணங்களுக்காகவோ கிராமங்களுக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்காது. கடந்த காலத்தில் தனி நபர்களாலும் நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுடன் தோள் நின்று, மக்கள் சக்தி குளங்கள் தோறும் திட்டம் நன்மை பயக்கும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.