by Staff Writer 20-09-2018 | 7:49 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
மரக்குற்றிகளுக்குப் பதிலாக கொங்ரீட் மூலம் முதற்தடவையாக நிர்மாணிக்கப்பட்ட மின்சார வேலி இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
30 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த மின்சார வேலிக்காக 19 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினால் மூன்று வாரங்களில் இந்த மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன், அதனை இன்று ஜனாதிபதி பார்வையிட்டார்.
இதேவேளை, 15 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள கோமரன்கடவல பக்மீ வாவியும் ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் 66 ஏக்கர் வயல் நிலத்திற்கு நீர் பாய்ச்சப்படவுள்ளது.
கந்தளாய் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மருத்துவ உபகரணங்களும் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதற்காக 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை ஜயசுமனாராம மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் ஜனாதிபதி இன்று பிற்பகல் திறந்து வைத்தார்.