Colombo (News 1st) ஜனாதிபதி தொடர்பிலான இருவேறுபட்ட நிலைப்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டக் கருத்தொன்றை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இன்று தெரிவித்திருந்ததாவது,
தற்போது எமக்கு பெறுமதியான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார். நாட்டை ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்துள்ளார். நாட்டைப் பிளவுபடுத்தாமல், ஒரே நாட்டில் எவ்வித பிரச்சினையும் இன்றி, மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, அதிகாரத்தைப் பகிர்ந்து, அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தற்போது சிந்திக்கின்றார். ஒரே நாட்டிற்குள் நாம் அனைவரும் சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்.
எனினும், கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா
பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் வருகின்ற வாரத்தில் ஜனாதிபதி உரையாற்றப்போவது எங்களுக்கு பல அச்சங்களை ஏற்படுத்துகின்றது. பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. மன்னாரிலே இன்றைக்கும் புதைகுழியில் எலும்புக்கூடுகள் நூற்றுக்கணக்காக தோண்டப்பட்டுக் கொண்டிருந்தால், அதற்குக் காரணம் யார், அது யாருடைய எலும்புக்கூடுகள் என்று அறிவிக்க வேண்டிய பொறுப்புள்ள ஜனாதிபதி, அதற்குப் பொறுப்பானவர்களைக் காப்பாற்றப்போகிறோம் என்று சொல்வதை நாங்களும் எமது மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஜனாதிபதி தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன?