இலங்கையில் வெப்பநிலை அதிகரிக்குமென எச்சரிக்கை

இலங்கையில் வெப்பநிலை அதிகரிக்கும்: உலக வங்கி எச்சரிக்கை

by Staff Writer 20-09-2018 | 3:27 PM
Colombo (News 1st) அதிக வெப்பத்துடனான காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை என்பன அச்சுறுத்தலுக்குள்ளாகும் என உலக வங்கி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது. தெற்காசியாவின் மொத்த சனத்தொகையில் அரைவாசியினர் தற்போது இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் நிலவும் சாதாரண வெப்பநிலை அதிகரிப்பதுடன், மழை வீழ்ச்சியும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம், கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 2050 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் சாதாரண வெப்பநிலை 1.0 பாகை செல்சியஸிலிருந்து 1.5 பாகை செல்சியஸாக அதிகரிக்குமெனவும் உலக வங்கியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்பன் வௌியீடு தொடர்பில் இலங்கை அரசினால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாதவிடத்து , வெப்பநிலை 2 பாகை செல்சியஸால் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.