ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வருக்கு பிணை

M. L. A. M. ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் உள்ளிட்ட நால்வருக்கு நிபந்தனையுடனான பிணை

by Staff Writer 19-09-2018 | 7:41 PM
Colombo (News 1s) நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வருக்கு இன்று நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிரான வழக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. M. L. A. M. ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இருவர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர். ஏற்கனவே வழங்கப்பட்ட பி அறிக்கையின் பிரகாரம் 1 தொடக்கம் 8 வரையான ஆவணங்களை இன்று மன்றில் சமர்ப்பித்து தங்களுக்கு பிணை வழங்குமாறு பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் நால்வரும் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்வதற்கு நீதவான் ஏ.சி. ரிஸ்வான் இன்று அனுமதித்துள்ளார். அத்துடன், பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதாக இருந்தால் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கிய பின்னர் செல்லலாம் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பிரதிவாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் நீதிமன்றத்தால் கவனம் செலுத்தப்படுமெனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நால்வரையும் கைது செய்ய வேண்டுமென தெரிவித்து பொலிஸாராலோ நீதிமன்றத்தாலோ கட்டளை பிறப்பிக்கப்படவில்லை என கூறி பிரதிவாதிகளால் பிணை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிரதிவாதிகளால் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் நிதியுதவியின் கீழ் தனியார் பல்கலைக்கழகமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இதன் கட்டுமானப் பணிகள் பிறிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பிரதியமைச்சர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் 150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கடத்தியமை தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்