புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம்

பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றம்

by Staff Writer 19-09-2018 | 9:53 PM
Colombo (News 1st) பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. 01. பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் பெருந்தோட்ட பிராந்தியத்தில் சமூக பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் உள்ள பெருந்தோட்ட சமுதாயத்தினரை சமூக நீரோட்டத்தினுள் இணைப்பது இந்த சட்டமூலத்தினூடாக உறுதி செய்யப்படுகின்றது. இதற்கான அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டு பெருந்தோட்ட மக்கள் அரச அபிவிருத்தி செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படவுள்ளனர். 02. பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டமூலம் 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் காணப்படும் " கிராம வேலைகளை திருத்துவதும், நிர்மாணிப்பதும்" எனும் சொல்லுக்கு பதிலாக "தேர்ந்தெடுத்த கிராமங்கள் மற்றும் தோட்டக்குடியிருப்பு என்பனவற்றின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி" என்ற சொல்லை இட்டு இந்த சட்ட மூலம் திருத்தப்பட்டுள்ளது. இதுவரைக் காலம் பிரதேச சபை சட்டத்திற்குள் காணப்பட்ட கிராமங்களுக்கு மேலதிகமாக புதிய சட்ட திருத்தத்தினூடாக பெருந்தோட்டத்துறையும் பிரதேச சபை நடவடிக்கைகளுக்குள் உள்வாங்கப்படுகின்றது. 03. இலங்கை ஆளணி முகாமை நிறுவக திருத்த சட்டமூலம் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் எனும் சொல்லுக்கு பதிலாக "இலங்கை பட்டயம்பெற்ற ஆளணி முகாமை நிறுவகம்" எனும் பதத்தை இணைத்து சட்டமூலம் திருத்தப்பட்டுள்ளது.