நிலமீட்புப் போராட்டத்தில் காஞ்சிரங்குடா மக்கள்

நிலமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள திருக்கோவில் - காஞ்சிரங்குடா மக்கள்

by Staff Writer 19-09-2018 | 10:18 PM
Colombo (News 1st)  அம்பாறை - திருக்கோவில், காஞ்சிரங்குடா பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நிலமீட்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். காஞ்சிரங்குடா பகுதி மக்கள் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்தனர். தற்போது தமது காணிகளை மீளக்கையளிப்பதற்கு பிரதேச செயலகம் மறுப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காணிகள் மீள கையளிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் காஞ்சிரங்குடா பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, குறித்த காணி பல வருட காலமாக எவ்வித உரிமை கோரலுமின்றி காணப்பட்டதாக பிரதேச செயலாளர் கூறினார். தற்போது அந்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பயிற்சி நிலையம் மற்றும் பாரம்பரிய உணவுத் தொழிற்சாலை அமைப்பதற்கான முன்மொழிவு மீள்குடியேற்ற அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காணியுரிமை கோரும் மக்கள் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.