கைதிகளின் உண்ணாவிரதம் 6ஆவது நாளாக தொடர்கிறது

கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 6 ஆவது நாளாக தொடர்கின்றது

by Staff Writer 19-09-2018 | 7:07 PM
Colombo (News 1st) பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று 6 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. 8 சிறைக்கைதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை தொடர்பில் நீதியமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அநுராதபுரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள கைதிகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திரராஜா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடக செயலாளர் க.சுந்தரலிங்கம் ( துளசி), பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.