இலங்கை தேயிலை விற்பனை குறித்து பேச்சுவார்த்தை

இலங்கை தேயிலை விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வங்கி நடவடிக்கை

by Staff Writer 19-09-2018 | 8:24 AM
Colombo (News 1st) ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தேயிலையை விற்பனை செய்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையின் தேயிலை, தேங்காய் மற்றும் றப்பர் உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் பலவற்றை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இந்தநிலையில், நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் 9 வீதமானவை ஈரானுக்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் லூயிஸ் விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையினால் ரஷ்யா மற்றும் துருக்கியின் நாணயப்பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையினால் இலங்கை தேயிலைக்கான கேள்வி தற்காலிகமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமுலிலுள்ள தடை காரணமாக ஈரானுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலையை உற்பத்தி செய்ய முதலீடு செய்யப்படும் பணத்தை வேறு உற்பத்திகளில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் இலங்கை தேயிலையின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த வண்ணமுள்ளது. 100 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை தற்போது 80 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.