20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவிப்பு

by Staff Writer 18-09-2018 | 8:43 PM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டார். கட்சித் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். அரசியலமைப்பு விற்பன்னர்கள் என தாமே கூறிக்கொள்ளும் இவர்கள் அவ்வப்போது எதனைக் கூறி வருகின்றார்கள்? புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு சபையாக பாராளுமன்றத்தை மாற்றி அவ்வப்போது கூடி பல்வேறு குழுக்களை நியமித்துக்கொண்டு மில்லியன் கணக்கில் மக்களின் பணத்தை செலவிட்டு இவர்கள் ஆடிய நாட்டியம் என்ன? அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் உள்ளிட்ட பல கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறிவந்த கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, தற்போது மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள 20 ஆவது திருத்தம் மிகவும் சிறந்தது என தெரிவித்துள்ளார். மிகவும் சிறந்தது என கூறுவதற்காக மக்களின் பணமும் பாராளுமன்றத்தின் நேரமும் விரையமாகும் வரை ஏன் பார்த்துக்கொண்டிருந்தீர்கள்? புதிய அரசியலமைப்பை வகுக்கும் செயற்பாடு மற்றும் 20 ஆவது திருத்தம் என்பன மக்களின் உண்மையான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்படவில்லை என்பதே மக்கள் மீது கரிசனை கொண்ட அநேகமானவர்களின் நிலைப்பாடாகும். கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவிற்கு மிகவும் பொருத்தமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் இந்த செயற்பாடுகளின்போது தலைமையேற்று செயற்பட்டார். 19 ஆவது திருத்தத்தின்போதும் முன்னிலையில் இருந்து செயற்பட்ட இவர்கள் இறுதியில் எதனைச் செய்தார்கள்? ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து இலகுவில் நீக்க முடியாத அதிகாரம் உள்ள பிரதமர் ஒருவரை அல்லவா இவர்கள் உருவாக்கியுள்ளார்கள்? மக்களின் செல்வாக்கு மிகவும் குறைந்த ஒருவரது அதிகாரத்தை அதிகரிப்பதில் ஆரம்வம் காட்டிய இவர்கள் மீண்டும் நிறைவேற்று அதிகாரங்களையும் அதே நபருக்கு வழங்குவதற்கு அல்லவா தற்போது முயல்கின்றனர்? மக்களிடம் ஒன்றைக் காண்பித்து நீதிமன்றத்திற்கு வேறொன்றையும் பாராளுமன்றத்திற்கு முற்றிலும் வேறுபட்ட ஒன்றையும் காண்பித்து நிறைவேற்றியதாக அரசாங்கம் மீது எதிர்க்கட்சியினர் பல தடவைகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த செயற்பாடுகளுக்கும் அரசியலமைப்பு விற்பன்னர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் முன்னின்று செயற்பட்டமை நாடறிந்த உண்மையாகும். நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் வகையில், இவர்கள் யாருடைய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்றார்கள்? மக்கள் புத்தி சாதுர்யமுடையவர்கள் என்பதை மாத்திரம் அரசியல் விற்பன்னர்கள் என மார்தட்டிக்கொள்வோருக்கு மீண்டும் நினைவூட்ட வேண்டியுள்ளது.