போக்குவரத்து அமைச்சின் பேச்சுக்கு அழைக்கவில்லை

போக்குவரத்து அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு அழைக்கவில்லை - அகில இலங்கை தனியார் பஸ் சங்கம்

by Staff Writer 18-09-2018 | 7:46 AM
Colombo (News 1st) பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் நாளை (19) நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு தமது சங்கத்தினரை இதுவரை அழைக்கவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் மட்டும் அதில் கலந்துகொண்டு விடயங்களை முன்வைக்கவுள்ளதாக அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு தமது சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். பஸ் கட்டண அதிகரிப்பானது, அமைச்சரவைத் தீர்மானத்தின் பின் அறிவிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிக்கின்றார். டீசல் விலை அதிகரித்தமைக்கு ஏற்ப பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை பஸ் சங்க சம்மேளனம் கேட்டுக் கொண்டமை தொடர்பில் அமைச்சர் இந்தக் கருத்தைத் தெவித்தார்.