பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யும் இந்தியா

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்திய சிவில் விமான சேவை அதிகாரசபை தீர்மானம்

by Staff Writer 18-09-2018 | 5:50 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு மூலோபாய முக்கியத்துவமுடைய பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய சிவில் விமான சேவை அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக ''த டைம்ஸ் ஒப் இந்தியா'' நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. இந்திய சிவில் விமான சேவை அதிகார சபையின் காணி முகாமைத்துவம் மற்றும் வணிக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறைவேற்று பணிப்பாளர் அனில் குப்தா மற்றும் அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சின் ஒன்றிணைந்த செயலாளர் சஞ்சை பாண்டே ஆகியோருடன் இன்று பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றைத் தயாரிக்க இந்திய சிவில் விமான சேவை அதிகாரசபை தயாராகவுள்ளதாகவும் ''த டைம்ஸ் ஒப் இந்தியா'' வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சிவில் விமான சேவை அதிகார சபை இதுவரை இந்திய நகரங்களிலும் நகரங்கள் அல்லாத பகுதிகளிலும் 60-க்கும் அதிகமான விமான நிலையங்களை அபிவிருத்தி செய்துள்ளதுடன், வௌிநாடொன்றில் பாரியளவில் விமான நிலைய திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் கோரிக்கைக்கு இணங்க, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இதற்கு முன்னர் இந்தியா இணக்கம் தெரிவித்திருந்ததாக ''த டைம்ஸ் ஒப் இந்தியா'' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதால், வட இந்தியாவுக்கும் மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் வட மாகாண மக்கள் நேரடியாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.