வீழ்ச்சியடையும் இலங்கை கிரிக்கெட்

நிர்வாகத்தின் குறைபாடுகளால் வீழ்ச்சியடையும் இலங்கை கிரிக்கெட்

by Staff Writer 18-09-2018 | 9:17 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான அஞ்சலோ மெத்யூஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்து, லீக் சுற்றுடன் இலங்கை வெளியேறிதே அதற்குக் காரணம்.
எமது இந்தத் தோல்வி முழு நாட்டுக்கும் இழுக்கு. அதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நாம் சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியிலும் நாம் 150 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்தப் போட்டியிலும் அவ்வாறே. துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத காரணத்தாலேயே நாம் இந்தத் தோல்விகளை சந்தித்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். களத்தடுப்பில் நாம் உயர் மட்டத்தில் செயற்படாவிட்டாலும் இரண்டு போட்டிகளிலும் எம்மால் 250 ஓட்டங்களை எட்டியிருக்க முடியும். ஆகவே, இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய துடுப்பாட்ட வீரர்களே காரணம்.
என அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வீரர்கள் துடுப்பெடுத்தாடிய விதம் கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது. முதல் போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளும் LBW முறையில் வீழ்த்தப்பட்டன. அவ்வாறே முதல் போட்டியில் தசுன் ஷானகவும் இரண்டாவது போட்டியில் ஷெஹான் ஜயசூரியவும் ரன் அவுட் ஆக அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸே காரணமாக இருந்தார். பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகளிலுமே இலங்கை அணியின் ஒரு வீரரால் கூட அரைச்சதமடிக்க முடியவில்லை. அது வீரர்களின் குறைபாடா அல்லது துடுப்பாட்ட பயிற்றுநரின் ஆலோசனைகளால் ஏற்பட்ட தவறா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநர், வீரர்களின் துடுப்பாட்டப் பாணியை மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதே அதற்குக் காரணம். அத்துடன், இந்த 2 போட்டிகளிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. தவறவிடப்பட்ட பிடிகளே அதற்கு சான்று. தெரிவுக் குழுவின் அணித் தெரிவு தொடர்பாக விமர்சிக்கப்படும் போது, அவர்களின் தீர்மானத்தில் பதிவான ஒரேயொரு நல்ல விடயமாக லசித் மாலிங்கவை தெரிவு செய்யதது மாத்திரமே உள்ளது. கடந்த 2 வருடங்களில் 60 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி அவற்றில் 18 வெற்றிகளையும் 37 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் 15 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கையால் அவற்றில் 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற முடிந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், உத்தியோகத்தர்களும் மேற்கொள்ளும் நிர்வாக ரீதியான குறைபாடுகளால் முழு நாடும் நேசிக்கும் கிரிக்கெட் விளையாட்டே பாதிக்கப்படுகின்றது. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரும், விளையாட்டுத்துறையின் உரிய அதிகாரியும் சிறப்புரிமைகளை மாத்திரம் எதிர்பார்த்து செயற்படாமல், கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுத்தாலே ஒழிய இவ்வாறான தோல்விகளைத் தவிர்க்க முடியாது. 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு நீண்ட கால அவகாசம் இல்லை.