சி.வி. விக்னேஷ்வரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

by Staff Writer 18-09-2018 | 3:33 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக்க டி சில்வா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், வட மாகாண அமைச்சர்களான கே.சிவனேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட மாகாண அமைச்சராக செயற்பட்ட பா.டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சர் பதவியில் அமர்த்துமாறு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமுல்படுத்தாமைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையில் சி.வி.விக்னேஷ்வரன் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கனகேஸ்வரன், கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக தமது கட்சிக்காரர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு எவ்வித சட்ட நடைமுறைகளும் இல்லை என கூறிய ஜனாதிபதி சட்டத்தரணி, குறித்த வழக்கு தொடர்பான அடிப்படை எதிர் மனுவையும் சமர்ப்பித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், வட மாகாண அமைச்சர்களான கே.சிவனேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.