முதல் சுற்றுடன் வௌியேறியது இலங்கை அணி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்: முதல் சுற்றுடன் வௌியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இலங்கை அணி

by Staff Writer 18-09-2018 | 8:24 AM
ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய தீர்மானமிக்க போட்டியில் 91 ஓட்டங்களால் தோல்வியடைந்தமையால் இலங்கை அணிக்கு இந்த நிலை உருவானது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் செசாத் 34 ஓட்டங்களையும் இஷ்மனுல்லா 45 ஓட்டங்களையும் பெற்றனர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ரஹ்மட் ஷா சர்வதேச ஒருநாள் அரங்கில் 12 ஆவது அரைச் சதத்தை எட்டிய நிலையில், 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது. திசர பெரேரா 5 விக்கெட்களையும் அகில தனஞ்சய 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடக் களமிறங்கிய இலங்கை அணி, 88 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது. குசல் மென்டிஸ் ஓட்டமின்றிய நிலையில் ஆட்டமிழக்க , தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களோடும் குசல் ஜனித் பெரேரா 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். உபுல் தரங்க 36 ஓட்டங்களைப் பெற்றநிலையில், பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் திசர பெரேரா ஜோடி ஆறாவது விக்கெட்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்து சற்று நம்பிக்கையளித்தது. பின்னர் அஞ்சலோ மெத்தியூஸ் 22 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க, போட்டியில் இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. திசர பெரேரா, அணியை வெற்றிக்கு இட்டுச்செல்வார் என எதிர்ப்பார்த்தாலும், அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்ததால் அதற்கான வாய்ப்பும் அற்றுப்போனது. 158 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழக்க, தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு பிரகாசமானது. 5 தடவைகள் ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த அணியாக வரலாற்றில் இணைந்த இலங்கை அணிக்கு, இவ்வருடத் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், இலங்கை அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பதிவுசெய்த முதல் சர்வதேச ஒருநாள் வெற்றி இதுவாகும். மேலும், டெஸ்ட் அந்தஸ்துடைய அணியொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பதிவுசெய்த ஐந்தாவது சர்வதேச ஒருநாள் வெற்றியாகவும் இது பதிவானது. இதனிடையே, ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய மற்றும் ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.