மாமனிதர் - அஷ்ரபின் 18வது நினைவுதினம் இன்று

மாமனிதர் - அஷ்ரபின் 18வது நினைவுதினம் இன்று

by Staff Writer 16-09-2018 | 9:45 PM

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 18 ஆவது நினைவுதினம் இன்றாகும்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாக திகழ்ந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபின் 18வது நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது. முஹம்மது மீரா லெப்பை ஹுசைன் மற்றும் மதீனா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராக எம்.எச்.எம். அஷ்ரப், 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்தார். கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில் தனது கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பித்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கவிஞர், எழுத்தாளர் , சட்டத்தரணி எனப் பன்முக ஆளுமை கொண்டவராக திகழ்ந்தார். முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைக்காக குரல்கொடுத்துவந்த, எம்.எச்.எம். அஷ்ரப், 1981 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி காத்தான்குடியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை ஸ்தாபித்தார். 1989 ஆம் ஆண்டு தனது முதல் பாராளுமன்ற பிரவேசத்தினை மேற்கொண்டவர் 1994 இல் கப்பல் துறைமுகங்கள துறைமுகங்கள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக செயற்பட்டார் ஒலுவில் துறைமுகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கல்முனை மீன்பிடி துறைமுகம், காலி துறைமுக அபிவிருத்தி, எலிசபெத் இறங்குதுறை அபிவிருத்தி போன்ற திட்டங்கள் அவரது பெயரை இன்னும் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி, கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணம் நோக்கி அஷ்ரப் பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் அரநாயக்க பகுதியில் வெடித்துச் சிதறியதில் அஷ்ரப் உள்ளிட்ட அவருடன் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறிய சம்பவத்தின் பின்னணி இன்றளவும் மர்மமாகவே இருக்கின்றது. இதனை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.