கரோலினாவைத் தாக்கிய புளோரன்ஸ் புயலால் ஐவர் பலி

கரோலினாவைத் தாக்கிய ஃப்ளோரன்ஸ் புயலால் ஐவர் பலி

by Bella Dalima 15-09-2018 | 4:20 PM
அமெரிக்காவின் கடலோரப் பகுதியான கரோலினா நகரை ஃப்ளோரன்ஸ் புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘ஃப்ளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் நேற்று (14) கிழக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் நேற்று காலை புயல் கரையைக் கடந்தது. அதனால் பலத்த மழை பெய்ததுடன், மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் வடக்கு கரோலினா பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீதிகளில் 10 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் தேங்கியது. பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள் சரிந்தன.  அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின. புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகிவிட்டனர். வில்மிங்டனில் ஒரு பெண் தனது குழந்தையுடன் உயிரிழந்துள்ளார். வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், லெனாயிர் கவுன்டி பகுதியில் 70 வயது முதியவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மின்சாரம் தாக்கியும், மற்றொருவர் வீட்டின் வெளியே காற்றில் சிக்கித் தவித்த தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்ற முயன்ற போதும் உயிரிழந்துள்ளனர். ஹாம்ஸ்டட் நகரில் ஒரு பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். வீட்டின் அருகே மரம் சரிந்து வீழ்ந்ததால், அவரை உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதற்கிடையே, புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் 20,000-இற்கும் மேற்பட்டோர் வெளியேறி அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். புயல் பாதித்த வடக்கு கரோலினாவிற்கு அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.